ஆடி மாதத்தில் உண்டாகும் நற்பலன்கள் என்னென்ன?

ஆடி மாதத்தில் உண்டாகும் நற்பலன்கள் என்னென்ன?

ஆடி மாதம் என்றாலே தெய்வீக மாதமாக கருதப்படுகிறது. அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம். திருவிழாக்கள் கொண்டாடப்படும் மாதம் ஆடி மாதம். இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு மாவிளக்கு போடுதல், கூழ் வார்த்தல் போன்ற சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குச் சிறப்பான மாதம். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களைக்கட்டும். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தினை வரவேற்பதுபோல் அம்மாதத்தின் முதல் நாளைப் பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். பல்வேறு திருவிழாக்கள் பண்டிகைகள் கோலாகலமாக கிராமங்களில் கொண்டாடப்படுகிறது. 


தெய்வ சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. பச்சரிசி மாவையும், வெல்லச் சர்க்கரையும், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் சிறிது நெய் விட்டு மாவாகப் பிசைந்து, அந்த மாவை வாழை இலையின் நடுவில் பரப்பி, அந்த மாவின் நடுப்பகுதியில் குழி போல் செய்து அதில் நெய் விட்டுத் திரி போட்டு தீபம் ஏற்றி தெய்வ சன்னிதியில் குறிப்பாக அம்மன் சன்னிதியில் வைத்து, பிரதட்சணம் செய்து, நமஸ்காரம் செய்து வேண்டிக் கொள்வதே மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது.

இது ஒரு சிறப்பான வழிபாடு.
குடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் முன்னர் இவ்வாறு குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டுப் பிரார்த்தித்துக் கொள்வதால், நிகழ்ச்சிகள் தடங்கலின்றி நடக்கக் காரணமாக அமையும்.

மேலும், ஒவ்வொரு குடும்பத்திலும் வருடத்துக்கு ஒருமுறை குலதெய்வ சன்னிதியில் அல்லது தனது வீட்டில் நல்ல நாள் பார்த்து உரல், உலக்கை கொண்டு தன் வீட்டிலேயே பச்சரிசி மாவை இடித்துத் தயார் செய்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அம்பாள் சன்னிதியில் மாவிளக்கு தீபம் ஏற்றுவது குடும்பத்தில் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும். ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்பது ஐதீகம்.

ஆடிமாத விரதங்களின் மகிமை
ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அம்மன் கோவில்களுக்கு சென்று, பெண்கள் வழிபட்டால், எண்ணிய காரியம் ஈடேறும். இந்நாளில், பெண்கள் அதிகாலையில் குளித்து, குலதெய்வ வழிபாடு நடத்திய பின், துர்க்கை அம்மன், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.

கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப்பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம். இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும். குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.