செமஸ்டர் தேர்வு அட்டவணை; அண்ணா பல்கலை வெளியீடு
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழி செமஸ்டர் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, கல்லுாரி மாணவர்களுக்கு டிசம்பரில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அரசின் அறிவிப்புப்படி, பிப்., 1 முதல், ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.இதையொட்டி, இன்ஜினியரிங் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை, அண்ணா பல்கலை நேற்று வெளியிட்டது.பிப்., 1ல் தேர்வுகள் துவங்கி, மார்ச் 5 வரை நடத்தப்பட உள்ளன. இன்ஜினியரிங் மாணவர்கள், அரியர் மாணவர்களுக்கும் சேர்த்து, தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான வழிகாட்டு முறைகளும் அறிவிக்கப் பட்டுள்ளன.அதன்படி, மாணவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து மட்டுமே தேர்வுகளை எழுத வேண்டும்.விடைத்தாள்களை பல்கலை அறிவுறுத்திய நேரத்துக்குள், ஆன்லைன் வழியே பதிவேற்ற வேண்டும்.அந்த விடைத்தாள்களில் எந்த திருத்தமும் இன்றி, தபால், கூரியர் வழிகளில் கல்லுாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
எக்காரணம் கொண்டும், கல்லுாரிக்கு விடைத் தாள்களுடன் வரக்கூடாது.பெயர், பதிவு எண் உள்ளிட்ட விபரங்களை தவறாக எழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடுக்கு எடுக்கப்படாது.இப்படி பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.