61 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் அவர் எடுத்த அதிரடி முடிவு இதுதான்!
தருமபுரியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் நீட் தேர்வு எழுதி, அதில் வெற்றி பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இடம்பிடித்துள்ளார்.
தருமபுரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவபிரகாசம், நீட் தேர்வில் வென்று மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்காக ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரிக்கு வருகை புரிந்துள்ளார். சிவபிரகாசம் அரசுப் பள்ளியில் படித்தவர் என்பதால் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசையில் 249ஆவது இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மருத்துவராக வேண்டும் என்பது தனது சிறுவயது ஆசை என்றும், வயது உச்சவரம்பு இல்லாததால் நீட் தேர்வு எழுதி, வெற்றியும் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலம் மருத்துவ சேவையாற்ற இயலாது என்பதால் தனது மகன் படிப்பில் சேர எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தனக்கான வாய்ப்பை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுப்பதுபற்றி யோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவபிரகாசத்தின் மாணவர் ஒருவர் தரவரிசையில் 5ஆவது இடம்பிடித்து தற்போதைய கலந்தாய்வில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.