தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! முதன்மை கல்வி அலுவலரின் கடிதம்!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. இதையடுத்து தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார். தற்போது இந்த கடிதத்தில் உள்ளவற்றை விரிவாக பார்ப்போம்.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிடப்பட்டது.
இதில் தெரிவித்துள்ளதாவது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு தொடங்க இன்னும் சற்று நாட்களே உள்ளதால் பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் பொதுத்தேர்வு குறித்த பயத்தில் உள்ளனர். அதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதத்தில் கூறியதாவது, மாணவர்களாகிய நீங்கள் “பெற்றோர்களின் கனவை சுமப்பவர்கள்”, உங்களின் பெற்றோரை பெருமைப்படுத்த இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் என்றும் பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதனை உங்களின் 2வது பெற்றோர் தீர்த்து வைக்க தயாராக உள்ளார்கள் என்று கூறியுள்ளார். அத்துடன் மாணவர்களுக்கு தற்போது “படிப்பு சுமை அல்ல, சுகம்”, இனி ஒவ்வொரு நாளும் மிகவும் முக்கியம் ஆதலால் சரியாகத் திட்டமிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.