மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை பெற மாணவிகள் செய்யவேண்டியது என்ன?
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் ( Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme ) என மாற்றியமைக்கப்பட்டது.
இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு செலவுத் திட்டத்தில் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் (scholarship for college students) வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், அரசு பள்ளியில் இருந்து கல்லுாரிகளுக்கு சென்று முதல், இரண்டு, மூன்றாவது ஆண்டு படிக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அந்தவகையில், 6 முதல் 12வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை 25.06.2022 முதல் 30.06.2022க்குள் பதிவு செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு புதிய இணைய முகவரியை தொடங்கியுள்ளது.
அதன்படி, பயன்பெறும் மாணவிகளின் விவரங்களை, penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று முதல் வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் நகலை வழங்கி மாணவர்கள் தங்களது கல்லூரிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணைய வசதி உள்ள மாணவிகள் தாங்களாகவே கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும், தங்களது விவரங்களை பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்கும், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.