அரசு பள்ளியில் ட்ரோன், செயற்கைக்கோள் ஆய்வகம்: தமிழகத்தில் முதல் முறையாக துவக்கம்
தமிழக அரசு பள்ளிகளில் முதல் முறையாக, ஆளில்லா விமானம் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆய்வகம், சென்னையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு உத்தரவை அடுத்து, தமிழக பள்ளிக்கல்வித் துறையில், 'வானவில் மன்றம்' என்ற அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தை, கடந்த நவம்பரில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
இளம் விஞ்ஞானி
இதன் ஒரு பகுதியாக, சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், ஆளில்லா விமானம் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சி ஆய்வகம், நேற்று திறக்கப்பட்டது.
சென்னை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில் நடந்த விழாவில், ஆய்வகங்களை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் துணை தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாத்துரை திறந்து வைத்தார்.
விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், காணொலி காட்சி வாயிலாக பேசியதாவது:
நம் நாட்டின் வளர்ச்சிக்கு, இளம் விஞ்ஞானிகள் அதிகம் தேவை. இதுபோன்ற ஆய்வகங்களால், பள்ளிகளில் இருந்தே இளம் விஞ்ஞானிகளை உருவாக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில், ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சியில், சென்னையில், 12 பள்ளிகளை சேர்ந்த, 200 மாணவ - மாணவியர் பங்கேற்று, ட்ரோன்களை இயக்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் முறையாக, அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளையின், 20 லட்சம் ரூபாய் நன்கொடை யில், இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது.
அவற்றில், மாணவர்கள் அறிவியல் காட்சிகளை பார்க்க ஸ்மார்ட் திரை வகுப்பறையும், வீடியோக்கள் உருவாக்க, ஸ்டூடியோ ஒன்றும் திறக்கப்பட்டுஉள்ளது.
விழாவின்போது, அரசு பள்ளி மாணவர்கள், ட்ரோன்களை இயக்கி, செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், நான்கு அரசு பள்ளிகளில், ட்ரோன் தொழில்நுட்ப ஆய்வகங்கள் துவங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயிற்சிகள்
இந்த ஆய்வகங்களில், அரசு பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, டிரோன் தொழில்நுட்பம், சிறிய ரக செயற்கைக்கோள் உருவாக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, தன்னார்வ பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை நிர்வாகிகள் மேத்யூ ஜோசப், பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியர் பிரபுதாஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.