பள்ளிகளில் மல்லி படம் திரையிட அறிவுரை
தேசிய திரைப்பட விருதுக்கான போட்டியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, சிறந்த படமாக தேர்வான, மல்லி படத்தை, பள்ளிகளில் திரையிட வேண்டுமென, பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி ஆணையரகம், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளிகளில் மாதந்தோறும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு, சிறார் சார்ந்த திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இம்மாதம் பிப்., 13 முதல் 17ம் தேதி வரை, மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்பப்பட வேண்டும். இது, 1999ம் ஆண்டு, தேசிய திரைப்பட விருதுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த படமாக தேர்வானது.
இந்த படத்தை ஒளிபரப்புவதற்கான இணைப்பு லிங்க், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
அதற்கு மாற்றாக, வேறு படத்தை திரையிடக்கூடாது. ஏனெனில், ஆவணப்படுத்தும்போது, படத்தில் இருந்து மாணவர்களின் கற்றல் மதிப்பீடு செய்யப்படும். இதற்கான பொறுப்பு ஆசிரியர், படம் திரையிடும் முன் படத்தை பார்க்க வேண்டும்.
அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து, மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும்.
இது குறித்த வழி முறைகளை பின்பற்றி, படத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.