அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புன்னகை திட்டம் தொடக்கம்!
சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்பு திட்டமான புன்னகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புன்னகை திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முதல்கட்டமாக 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் வாய்வழி தொற்று நோய்களை தடுக்க புன்னகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக ஐசிஏஆர் தெரிவித்துள்ளது. காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும். எச்3என்2 வைரஸ் கொரோனோ போல வேகமாக பரவும் என்பதால் முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு அரசும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த சூழலில் நாளை சென்னையில் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.