தமிழகத்தில் வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – அரசின் புதிய திட்டம்… விரைவில் அமல்!
தமிழகத்தில் வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – அரசின் புதிய திட்டம்… விரைவில் அமல்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு மற்றும் விவரங்கள் மாற்ற கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டை நேரடியாக வீடுகளுக்கு அனுப்ப அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக புதிய ரேஷன் கார்டு பெற ஏராளமானோர் முயற்சித்து வருகின்றனர். நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மிகவும் எளிதாகி விட்டது.
முன்பெல்லாம் தாலுகா அலுவலகம் சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. தற்போது அதற்கு அவசியமே இல்லை. வீட்டில் இருந்தபடி www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்ல ரேஷன் கார்டில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களையும் தேவைகேற்ப ஆன்லைன் வாயிலாகவே மாற்றிக்கொள்ளலாம்.
இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு மற்றும் விவரங்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பாக விண்ணப்பித்தவர்களுக்கு புதிய கார்டை அஞ்சல் துறை வாயிலாக நேரடியாக விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே அனுப்பும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. மாற்று கார்டு பெறுபவர்களுக்கு கட்டணமாக ரூ. 20 மற்றும் அஞ்சல் கட்டணமாக ரூ. 25 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.