80 ஆயிரம் மாணவர்கள் 1ஆம் வகுப்பில் புதிதாக சேர்ப்பு.
ஆசிரியர்களின் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து, கோடை விடுமுறையிலும், அரசு தொடக்க பள்ளிகளில் இதுவரை, 80 ஆயிரம் பேர் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துஉள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் செயல்படும், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, 37 ஆயிரம் பள்ளிகளில், 47 லட்சம் மாணவ -மாணவியர் படிக்கின்றனர்.
இதில், 24 ஆயிரம் தொடக்க பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில், 12 லட்சம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இந்த எண்ணிக்கை, மேலும் குறையாமல் இருக்கும் வகையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளிக்கல்வித் துறை சார்பில், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதையொட்டி, வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, கோடை விடுமுறையிலேயே துவங்க, தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரங்களால், நேற்று வரை, அரசு தொடக்க பள்ளிகளில், 80 ஆயிரம் மாணவர்கள்,ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்துள்ளனர்.
வரும், ஜூன் மாதத்துக்குள், இரண்டு லட்சம் பேர் வரை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.