தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க கோரிக்கை!!!
பொங்கல் போனஸ் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முதல்வர் வழங்க வேண்டும்:
தமிழக முதல்வர் அவர்கள் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ஆணையிட வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசானது பகுதிநேர ஆசிரியர்களை மத்திய அரசின் எஸ்எஸ்ஏ திட்ட வேலையில் 2012-ல் நியமித்தது.
இதில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை ஆகியவற்றில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றார்கள்.
ரூ.10 ஆயிரம் சம்பளம் தற்போது வழங்கப்படுகிறது.
இதுவரை பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் வழங்க பள்ளிக்கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதுபோல் ஒருங்கிணைந்த கல்வி ( சமக்ர சிக்சா ) அலுவலகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 11 ஆண்டுகளாகவே போனஸ் மறுக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் நியமன ஆணைப்படி வாரம் மூன்று அரைநாட்கள் என மாதத்திற்கு பன்னிரண்டு அரைநாட்கள் பணி செய்கின்றனர்.
மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் ஊதியமும் வழங்குவதில்லை.
இதனால் வேலைநாட்களை காரணம்காட்டி போனஸ் பதினொரு ஆண்டுகளும் வழங்கவில்லை.
ஆனால் மற்ற துறைகளில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கிறது.
அதுபோல் பள்ளிக்கல்வித்துறையில் இந்த ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் பல ஆண்டாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் போனஸ் கிடைக்க செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு வழங்க தமிழக முதல்வர் ஆணையிட வேண்டும்.