அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும் எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுவதால், இங்கு பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வழக்கமாக, கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக, கடந்த ஆண்டில் முன்கூட்டியே மார்ச் மாதத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. அதற்கு பரவலாக பெற்றோரிடம் வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் வரும் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எல்கேஜி, யுகேஜி, 1-ம் வகுப்பில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு சேர்க்கை ஆணைகளையும் வழங்கினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், துறை செயலர் பி.சந்திர மோகன், துறை இயக்குநர்கள் ச.கண்ணப்பன், பழனிச்சாமி, பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசுப் பள்ளிகளில் சேர ஏராளமானோர் பதிவு செய்துள்ளனர். அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப் பட்டுள்ளன என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.