சரண் விடுப்பு தொகைக்கு எவ்வளவு செலவாகும்?
நிதித்துறையிடம் அறிக்கை கேட்பு
தமிழகத்தில், 14 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில், அரசு ஊழியர்களுக்கு ஞாயிறு வார விடுமுறை, அரசு விடுமுறைகள் தவிர்த்து, ஆண்டுக்கு 30 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி உள்ளது.
அரசு பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு வார விடுமுறை தவிர்த்து, ஆண்டுதோறும் 15 நாட்கள் விடுப்பு வழங்கப்படுகிறது. தேர்வு விடுமுறை, கோடை விடுமுறை நாட்கள் அதிகம் என்பதால், விடுப்பு நாட்கள் ஊழியர்களை அரசு ஆசிரியர்களுக்கு குறைவு. விட
ஆண்டு விடுப்பில், 15 நாட்கள் பணிக்கு வந்திருந்தால், அதை சரண் விடுப்பாக மாற்றி, அதற்கான ஊதியத்தை ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறை, 2020 மே மாதம் வரை இருந்தது. கொரோனாகாலத்தில் நிதி நெருக்கடி காரணமாக, சரண் விடுப்பு சலுகை தற்காலிகமாக, அ.தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டது.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், சரண் விடுப்பு சலுகை வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். நான்கு ஆண்டுகளாக சரண் விடுப்பு சலுகை வழங்கப்படவில்லை. தற்போது போராடி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளில், இதுவும் பிரதானமாக உள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அரசு ஊழியர்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சரண் விடுப்பு சலுகை வழங்குவது, அரசின் பரிசீலனையில் உள்ளது. சரண் விடுப்பு ஊதியம் வழங்கினால் எவ்வளவு செலவாகும்; அதற்கான நிதி ஆதாரத்தை எப்படி திரட்டுவது என்பது குறித்து, நிதித்துறை செயலகத்திற்கு, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரண் விடுப்பு சலுகை வழங்கினால், அரசுக்கு ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் தேவைப்படும் என, அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.